முக்கியத்துவம்:-
- கடிதப் போக்குவரத்து என்பது அலுவலக நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாகும். இது இரண்டு வழி நடவடிக்கை ஆகும். ஒன்று அலுவலகத்திற்கு வெளியிலிருந்து வரப் பெறும் கடிதங்கள். மற்றொன்று அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் கடிதங்கள். இவ்விரண்டு நடவடிக்கைகளுக்கும் அலுவலகத் தலைவர், பிரிவுத் தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் கூட்டுப் பொறுப்பு வகிக்கின்றனர்.
- கடிதப் போக்குவரத்தை நிர்வாகத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஏனெனில், நிர்வாகம் கடிதப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. அலுவலகத்திற்கு உயர் அலுவலகங்கள், அரசு, சார்நிலை அலுவலகங்கள், இதர துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வெவ்வேறு வடிவில் பெறப்படும் கடிதங்களை அலுவலகத் தலைவர் பார்வையிட்டு, பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு, பிரிவு எழுத்தர்களுக்கு பகிர்மானப் பதிவேட்டின் படி வழங்கப்பட்டு, அவர்களது தன்பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இத்துடன் Incoming Tapals என்ற நடவடிக்கையின் மூலம் கடிதப் போக்குவரத்தில் 50% பணி நிறைவு பெறுகிறது. மீதி 50% பணியும் முழுமையாக நிறைவடைய வேண்டுமெனில், அவ்வாறு எழுத்தர்கள் பெற்ற கடிதங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்குண்டான உத்தரவுகள், கடிதங்கள், அறிக்கைகள் போன்றவற்றை தேவையான வடிவில் எழுதி பிரிவுத் தலைவர்களுக்கு அனுப்பி அவற்றின் தேவை, சரித்தன்மை ஆகியவற்றை பிரிவுத் தலைவர்கள் பார்த்து, அலுவலகத் தலைவருக்கு ஒப்புதலுக்கு அனுப்பி, அவை ஒப்புதல் ஆன பின் சேர வேண்டியவர்களுக்கு சேரும் பொழுதே உரிய நடவடிக்கை நிறைவு பெறுகிறது.
- இவ்வாறு அலுவலக வரைவுகளை எழுதி அனுப்புவதிலிருந்து அவை ஒப்புதல் ஆகி உரியவர்களுக்குக் அனுப்பப்படும் வரை அலுவலகத் தலைவர், பிரிவுத் தலைவர், எழுத்தர் ஆகியோருக்கு கூட்டு பொறுப்பு உண்டு. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு தேவைக்கேற்ப வரைவுகள் வெவ்வேறு வடிவில் எழுதப்பட்டு வருகிறது. வரைவுகள் எவ்வாறு எழுதப்பட வேண்டும், அதன் வடிவம், அமைப்பு, நடை, என்னென்ன தேவைக்கு என்னென்ன வரைவு எழுதப்படவேண்டும், என்பதை அரசுப் பணியில் உள்ள அனைவரும் குறிப்பாக உதவியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
- ஒரு அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் கடிதங்களை பார்த்தே அந்த அலுவலகத்தை மதிப்பீடு செய்ய இயலும். வரைவுகள் எளிய நடையில், புரிந்து கொள்ளக் கூடிய எளிய வார்த்தை களில் இலக்கணப்பிழையின்றி, தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கடித வரைவும் கூடுமான வரை தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும்.
அரசு அலுவலகத்தில் கீழ்க்கண்ட வரைவுகள் நடைமுறையில் உள்ளது
- அலுவலகக் கடிதம் [Official Letter]
- நேர்முகக் கடிதம் [Demi - Official Letter]
- செயல் முறைகள் / நடவடிக்கைகள் [Proceedings]
- குறிப்பாணை / கடிதக் குறிப்பு [Memo]
- அலுவல் சாராக் குறிப்பு [UnOfficial Letter]
- சுற்றறிக்கை [Circular ]
- அலுவலக ஆணை [Office Letter]
- கூட்ட நடவடிக்கைகள் [Minutes]
- ஆய்வுரை [Review]
- அறிவிக்கை [ Notification ]
- அறிவிப்பு [ Notice]
- மேலெழுத்து அல்லது மேற்குறிப்பு [Endorsement]
- அரசாணை [ Government Order ]
- நீதிமன்ற வரைவுகள் அசல் [ Drafts Counter Affidavits ]
அலுவலகக் கடிதம் (OFFICIAL LETTER)
- ஒரு அலுவலருக்கும் மற்றொரு அலுவலருக்கும் இடையே எழுதி கொள்ளும் கடிதம்.
- உயர் அலுவலர் சார்நிலை அலுவலருக்கு ( சார்நிலை பணி தொகுதி அலுவலரைத் தவிர்த்து ) எழுதலாம்.
- சார்நிலை அலுவலர், சார்நிலை பணித்தொகுதி அலுவலர் உயர் அலுவலருக்கு எழுதலாம்.
- சமநிலையில் உள்ள அலுவலர்கள் ஒருவருக்கொருவர் எழுதலாம்.
- வெவ்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஒருவருக்கொருவர் எழுதலாம்.
- அனுப்புநர் என்ற பகுதியில் அவரது பெயர் காணப்பட்டால் அந்த அலுவலரே அதனை ஒப்புதல் செய்தவா ஆவார். பெயர் இல்லாமல் அவரது பதவி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த வரைவை அந்த அலுவலருக்குப் பதிலாக கீழ்நிலை அலுவலர் ஒப்புதல் செய்தவர் ஆவார்.
- கடிதத்தில் பொருள், பார்வை பகுதிகளுக்கு முன் “அய்யா” அல்லது “அம்மையீர்” “Sir” or “Madam” என்ற வார்த்தைகள் மட்டுமே எழுதவேண்டும்.
- கடித எண்ணுக்கு முன் அது முடிவுக் கடிதமாக இருந்தால் அதன் முடிவு விவரமும் நடப்புக் கடிதமாக இருந்தால், “ந.க.” என்ற வார்த்தையும் எழுதலாம். இரண்டில் ஏதேனும் ஒன்று எழுதாமல்
- வரைவுக் கடிதத்திற்கு உள்பகுதி (Body of Letter) நேரடியாக பேசிக்கொள்வது போல் (Active Voice-ல்) எழுத வேண்டும். எளிய நடையில், எழுத்துப் பிழையின்றி புரியும் விதத்தில் எழுத வேண்டும். ). இறுதியாக, கடிதத்தின் முடிவில் “தங்கள் நம்பிக்கையுள்ள” “Yours faithfully” என எழுதி அதன் கீழே ஒப்புதல் அளிக்கும் அலுவலரின் பதவியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
- வரைவு கீழே யாருக்கு நகல் அனுப்பப்பட வேண்டுமோ அவர்களின் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.
- அலுவலக கடிதம் வரைவு மாதிரி [Modal ] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்முகக் கடிதம்: ( DEMI-OFFICIAL LETTER / D.O. LETTER)
- ஒரு அலுவலரின் நேரடி கவனத்திற்கு ஒரு நேர்வினைக் கொண்டு செல்வதற்காக கடிதம் எழுதுபவரின் பெயரையும் கடிதம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரின் பெயரையும் குறிப்பிட்டு எழுதப்படுகிறது. Demi என்றால் பாதி எனப் பொருள்படும்.
- எனவே, இக்கடிதம் பாதி அலுவல் ரீதியாகவும் (Official) பாதி தனிப்பட்ட விதமாகவும் (Personal) எழுதப்பட வேண்டும்.
- உயர் அலுவலர் சார்நிலை அலுவலருக்கும், சார்நிலை அலுவலர், உயர் அலுவலருக்கும், சமநிலையில் உள்ள அலுவலர்கள் ஒருவருக்கொரு வரும், வெவ்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஒருவருக்கொருவரும் நேர்முகக் கடிதம் எழுதிக் கொள்ளலாம்.
- கடித ஆரம்பத்தில் இடதுபுறம் கடிதம் எழுதுபவரின் பெயர், கல்வித் தகுதி, தற்போதைய பதவியின் பெயர் மட்டும் குறிப்பிட வேண்டும். “அனுப்புநர்” என்ற வார்த்தையை எழுதக் கூடாது.
- வலதுபுறம் அலுவலகப் பெயர், இடம், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், இ-மெயில் விவரம் எழுதப்படுகிறது.
- கடிதம் நடப்புக் கடிதமாக இருந்தால் கடித எண். இவ்வாறு எழுதப்பட வேண்டும். நேமுக .ந.க. எண். ஏ5 / 6698/ 2022.
- கடிதத்தில் அழைப்பு (Salutation) இவ்வாறு எழுதப்பட வேண்டும். அ). உயர்நிலை அலுவலர் சார்நிலை அலுவலருக்கு எழுதுவது சார்நிலை அலுவலர் உயர்நிலை அலுவலருக்கு எழுதுவது சமநிலையில் இருப்பவர்கள் எழுதுவது மற்றும் வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள் எழுதுவது எனதன்பார்ந்த ராஜன் (My Dear Rajan) மதிப்பிற்குரிய அய்யா / அம்மையீர் (Respected Sir / Madam) அன்பார்ந்த திரு. ரவி (Dear Thiru.Ravi) அன்பார்ந்த திருமதி. ராணி, (Dear Tmt. Rani) அன்பார்ந்த செல்வி .விஜயா, (Dear Selvi.Vijaya).
- மேற்குறிப்பிட்ட அழைப்பு, கடிதத்தின் பொருள் மற்றும் பார்வைக்கு முன் எழுதப்படவேண்டும். கடிதத்தின் உட்பகுதி (Body of the Letter) நேரடியாகக் கூறுவது போல் (Active Voice)-ல் இருக்க வேண்டும். (3rd Person-ல்) மூன்றாம் நபர் கூறுவது போல் எழுதக்கூடாது. எளிய நடையில், எழுத்துப் பிழையின்றி புரியும் விதத்தில் எழுத வேண்டும்
- கடிதத்தின் முடிவில் தங்கள் உண்மையுள்(Yours sincerely /truly) என வரைவின் வலது பக்கத்தில் எழுதி அதற்குக் கீழே ஒப்புதல் அளிக்கும் அலுவலரின் பெயர் முதல் எழுத்துடன் (Initial) எழுத வேண்டும்.
- இதற்குக் கீழே இடது புற மூலையில் கடிதம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அந்த அலுவலரின் பெயர் மற்றும் முழுமையான முகவரியுடன் எழுத வேண்டும்.
- எந்த ஒரு நேர்முகக் கடிதத்திலும், “தங்கள் அன்புள்ள” ( Yours lovingly ) என்ற வார்த்தையைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
செயல்முறை ஆணைகள் (PROCEEDING)
- செயல்முறை ஆணை அல்லது நடவடிக்கைகள் என்பது உத்தரவு ஆகும். உயர் அலுவலர் சார்நிலை அலுவலருக்கு உத்தரவு வழங்கலாம். ஆரம்பத்தில் எந்த அலுவலரின் உத்தரவு என எழுத வேண்டும்.
- அதற்குக் கீழே தற்போது யார் அந்த பதவியில் உள்ளார் என எழுத வேண்டும்.
- இடதுபுறம் ஆணையின் எண் குறிப்பிடவேண்டும். ந.க.எஸ் 8/6654 /2021 நாள்: .07.2022.மூ.மு. 5789 / 2018 (நாள்:1.1.2022 வலதுபுறம் குறிப்பிடப்பட வேண்டும்).
- அடுத்து பொருள் எழுத வேண்டும். அதற்குக் கீழ் “படிக்கப்பட்டவை” அல்லது “Read” என எழுத வேண்டும் இதில் எக்காரணம் கொண்டும் “பார்வை” அல்லது “Ref” என எழுதக்கூடாது.
- இடதுபுறம் மார்ஜினில், “ஆணை” அல்லது “உத்தரவு” / “Order” என எழுதவேண்டும்.
- Body of the Proceedings-ல் 3rd Person-ல் எழுதவேண்டும். ஒவ்வொருப் பத்திக்கும் எண் கொடுக்க வேண்டும்.
- முடிவில், இதற்கு ஒப்புதல் அளிக்கும் அலுவலரின் பதவி மற்றும் ஊர் குறிப்பிடவேண்டும்.
- ஆணையின் இடதுபுறம் ஆணை யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருடைய பெயர், முகவரி நகல் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருடைய பதவி, பெயர் ஆகியவற்றைத் தவறில்லாமல் எழுதவேண்டும்.
- செயல்முறைகளில் பிறப்பிக்கப்படும் ஆணை தேவைப்படும் இனங்களில் சுருக்கமாக (உதாரணம்: ஊதிய உயர்வு ஏற்பளித்தல் ) சில இனங்களில் விரிவாக (உதாரணம் : மேல் முறையீடு ஆணைகள்) இருக்க வேண்டும்.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
குறிப்பாணை [MEMORANDUM ]
- உயர் அலுவலர் சார்நிலைப் பணித்தொகுதி அலுவலருக்கு எழுதும் அலுவல் சார்ந்த கடிதமாகும்.
EXAMPLE:-
- மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கு எழுதுவது.
- மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி இயக்குநர் பஞ்சாயத்து, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதுவது.
- குறிப்பாணையின் ஆரம்பத்தில் இடதுபுறம் கோப்பு எண் எழுதிட வேண்டும். வலதுபுறம் அலுவலகத்தின் பெயர், இடம் ஆகியவற்றை எழுத வேண்டும்.
- வரைவின் நடுவில் குறிப்பாணை என்று தலைப்பு எழுதி அதற்குக் கீழே பொருள், பார்வை என எழுத வேண்டும்.
- Body of the memo – உட்பகுதி முழுவதும் அதாவது, ஆரம்பம் முதல் இறுதி வரை மூன்றாம் நபர் கூறுவது போல் (Passive Voice) 3rd Person - ல் எழுத வேண்டும் (உ.ம். - அனுப்பப்பட்டது, தெரிவிக்கப்படுகிறது) எக்காரணத்தை முன்னிட்டும் 1st Person - ல் எழுதக்கூடாது.
- முடிவில், ஒப்புதல் அளிக்கும் அலுவலரின் பதவியின் பெயர் வலதுபுறம் எழுதி இடதுபுறம் குறிப்பாணை அனுப்பப்படும் அலுவலரின் பதவியின் பெயர் அலுவலக முகவரி எழுத வேண்டும்.
- தனி நபர்களுக்கும் அவரது கோரிக்கை தொடர்பாக குறிப்பாணையினை எழுதலாம்.
- ஒரே குறிப்பாணையில் ஒன்றுக்கு மேற்பட்ட அலுவலர்களுக்கும் முகவரியிடலாம்.
- ஒரு அலுவலர் ஒரு சார்நிலை அலுவலருக்கு குறிப்பாணை அனுப்பிவிட்டு அதன் நகல் தகவலுக்காக என மேல் நிலையில் உள்ள அலுவலருக்கு அனுப்பக்கூடாது.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
அலுவல்சாராக் குறிப்பு (UN-OFFICIAL NOTE )
- அலுவல்சாராக் குறிப்பு இரண்டு நோக்கங்களுக்காக எழுதப்படுகிறது. ஒன்று, ஒரே அலுவலகத்தில் அலுவலர் இன்னொரு அலுவருக்கு எழுதும் அலுவலகக் கடிதம். மற்றொன்று ஒரு அலுவலகத்தில் அலுவலர் அவருக்குக் கீழ்பணிபுரியும் பதிவுபெற்ற அலுவலர் அல்லது பிரிவுத் தலைவர் அல்லது பிரிவு எழுத்தருக்கு எழுதும் கடிதமாகும்.
- உ.ம்: ஒரே அலுவலகத்தில் மற்றொரு அலுவலருக்கு எழுதுவது.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
சுற்றறிக்கை (CIRCULAR)
- ஒரு அலுவலர் அவருக்குக் கீழ் பணியாற்றும் பல அலுவலர்கள் அல்லது அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றும் பல அலுவலர்களுக்கு ஒரு நேர்வினைக் கொண்டு செல்லுவதற்கும் அறிவுரைகள் வழங்கும் பொருட்டும் எழுதும் வரைவு ஆகும்.
- சுற்றறிக்கையில் அனுப்பநர் / பெறுநர் என குறிப்பிடாமல் குறிப்பாணை வடிவத்தில் 3rd Person ல் (மூன்றாம் நபர் கூறுவது போல்) எழுதப்படுகிறது.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
ஆய்வுரை (REVIEW)
- களப்பணியாளர்கள் அவர்கள் ஒவ்வொருவரும் பிரதி மாதம் ஆற்றிய பணி விவரம் குறித்து நாட்குறிப்பை| உரிய இணைப்புகளுடன் சமர்பிக்க வேண்டும். நாட்குறிப்பு கிடைக்கப் பெற்றதும் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவர்களின் பணியை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்வதற்கு எழுதப்படும் வரைவு ஆய்வுரை ஆகும்.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் நிலுவைப் பட்டியல் கிடைக்கப் பெற்றதும் ஒவ்வொரு பிரிவின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுரை எழுதப்பட வேண்டும்.
- ஆய்வுரை 3rd person-ல் (மூன்றாம் நபர் கூறுவது போன்ற மொழி நடையில்) எழுதப்பட வேண்டும்.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
அறிவிக்கை (NOTIFICATION )
- மாவட்ட அரசிதழ் மற்றும் மாநில அரசிதழில் ஒரு செய்தியை வெளியிடும் போது அது அறிவிக்கை வடிவில் இருக்க வேண்டும்.
- பணியாளர்களின் பதவி உயர்வுப் பட்டியல், நில எடுப்பு, Land Acquisition, Forest Settlement போன்ற பொருட்களில் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
- அறிவிக்கையாக வெளியிடப்படும் வரைவுகளில் பொருள் பார்வை எழுதக்கூடாது. IIIrd Person-ல் (மூன்றாம் நபர் கூறுவது போன்ற மொழி நடையில்) எழுதப்பட வேண்டும்.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
அறிவிப்பு ( NOTICE)
- தனிநபர்களது கோரிக்கை தொடர் பாகவோ அல்லது அவர்களது மேல்முறையீட்டுமனுக்கள் தொடர்பாகவோ அவர்களை விசாரணை செய்ய வேண்டியிருந்தால் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்படுகிறது, குறிப்பாணை அனுப்பக் கூடாது.
- அழைப்பாணை, குறிப்பாணை வடிவில் IIIrd Person-ல் (மூன்றாம் நபர் கூறுவது போன்ற மொழி நடையில்) எழுத வேண்டும்.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
மேலெழுத்து அல்லது மேற் குறிப்பு ( ENDORSEMENT)
- ஒரு வார்த்தை அல்லது ஒரு சில வார்த்தைகளில் இலக்கண நடைமுறை யின்றி எழுதப்படும் வரைவுக்கு “மேலெழுத்து” அல்லது “மேற்குறிப்பு” என அழைக்கலாம்.
- இதில் பொருள் பார்வை ஆகியவை எழுதப்படுவதில்லை.
- வரைவு மாதிரி [Modal] இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது
அரசாணை (GOVERNMENT ORDER)
- தலைமைச் செயலகத்தில் பிறப்பிக்கப்படும் ஆணைகள் அரசாணை வடிவில் இருக்கும். இதர அலுவலகங்கள் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் செயல்முறை ஆணைகள் வடிவில் இருக்கும்.
- அரசாணைகள் பெரும்பாலும் அந்தந்தத் துறைகளின் அரசுச் செயலாளர்களால் அல்லது கூடுதல் அரசுச் செயலாளர்களால் பிறப்பிக்கப்படும்.
- தாளின் நடுவில் தமிழக அரசின் முத்திரை மற்றும் தமிழக அரசு என்ற வரிகள் இருக்கும். இதற்குக் கீழ் “சுருக்கம்” / “Abstract” எனக் குறிப்பிட்டு அரசாணையின் பொருள் எழுதப் படுகிறது.
- அதற்குக் கீழே, இடது புறம் அரசாணை எண், நடுவில் துறையின் பெயர் அதில் பிரிவு எண், வலதுபுறம் நாள் ஆகியவை எழுதப்படுகின்றன. அரசாணை எண் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு குறிக்கப்படுகிறது.
- G.O. ( Ms ). No. 1415 -அரசாணை (நிலை) எண் 1415
- G.O. ( Rt ). No. 326 - அரசாணை (வாலாயம்) எண் 326.
- Ms - Manuscript Series
- Rt Routine
- Pt - Permanent
- ID - One Decennial (Ten Years)
- அரசாணையில் “பார்வை” / “Ref.” என்ற சொல் எழுதப்படுவதில்லை. மாறாக, “படிக்கப்பட்டவை” “Read” என்ற சொற்கள் எழுதப்படுகின்றன.
- அரசாணையின் உட்பகுதியில் (Text) “ஆணை” / “Order' எனக் குறிப்பிட்டு, விவரம் மூன்றாம் நபர் மொழிநடையில் எழுதப்படுகிறது.
- இறுதியில், (By order of the Governor) என எழுதப்பட்டு வலதுபுறம் அரசாணையை ஒப்புதல் செய்யும் அலுவலரின் பதவி, பெயர் குறிப்பிட்டிருக்கும்.
- இடதுபுறம் அரசாணை யாருக்கு அளிக்கப்படுகிறதோ, அவர்களின் பெயர்கள் குறிக்கப்படுகிறது.
- Secretary to Government (Or) Under Secretary
Kindly Follow My Blogger. For more Posts.